டாக்டர்கள் வேலைநிறுத்தம்: இடமாற்றம் செய்தாலும் போராட்டத்தில் பின்வாங்க போவதில்லை


டாக்டர்கள் வேலைநிறுத்தம்: இடமாற்றம் செய்தாலும் போராட்டத்தில் பின்வாங்க போவதில்லை
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 31 Oct 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர்களை இடமாற்றம் செய்தாலும் போராட்டத்தில் பின்வாங்க போவதில்லை என்று அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

தமிழ்நாடு முழுவதும் அரசு டாக்டர்கள், தகுதிக்கேற்ற ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்புதல், பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் அரசு மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக அறிவிக் கப்பட்டு புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தேனி மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

முடிவில் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், அரசு டாக்டர்களின் இடமாற்ற நடவடிக்கைகளால் போராட்டத்தை ஒரு போதும் கைவிட்டு பின்வாங்க போவதில்லை. மேலும் தங்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. எங்களுடைய போராட்டம் மக்களை பாதிக்காத அளவில் நடைபெற்று வருகிறது என்றார். 
1 More update

Next Story