வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 4:45 AM IST (Updated: 1 Nov 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் சமையல் தொழிலாளியை கொன்று புதைத்த 7 டிரைவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் பகவதி என்ற பாட்ஷா (வயது 35), சமையல் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரில் உள்ள மறவர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுல்தான் என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந்தேதி பாட்ஷா, இட்லி வாங்குவதற்காக வள்ளியூர் பஸ் நிலைய பகுதிக்கு வந்தார்.

அவரை கண்ட சுல்தான், பாட்ஷாவை வள்ளியூர் ரெயில் நிலைய பகுதிக்கு அழைத்துள்ளார். அவருடன், வள்ளியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த வேன் டிரைவர் முத்துப்பாண்டி (35), ஆட்டோ டிரைவர்களான போலீஸ் நிலைய தெருவை சேர்ந்த லட்சுமணன் (24), மறவர் காலனி முத்துகிருஷ்ணன் (35), ராதாபுரம் ரோடு அய்யப்பன் (36), சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (36), தேவர் பெரிய தெருவை சேர்ந்த சிவா (35), மறவர் காலனியை சேர்ந்த சுல்தான் (30), கணேசன் (35) ஆகியோர் சென்றனர்.

அங்கு 8 பேரும் சேர்ந்து தங்களுடனும் தகாத உறவில் ஈடுபட வேண்டும் என்று பாட்ஷாவை வலியுறுத்தி உள்ளனர். ஆனால் பாட்ஷா இதற்கு உடன்படாமல், அனைவரையும் போலீசாரிடம் காட்டி கொடுத்து விடுவதாக எச்சரித்தார். இதனால் அவரை விட்டால் வெளியே சொல்லி விடுவார் என்று கருதி பாட்ஷாவை தாக்கினர். மேலும் அங்குள்ள சுவரில் அவரை மோதியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முத்துப்பாண்டி உள்பட 8 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது லட்சுமணன் இறந்து விட்டார்.

இந்த வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரணை நடத்தி, முத்துப்பாண்டி உள்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். கொடூரமான முறையில் கொலை செய்ததால் இவர்களை குற்றவாளிகளாக கருதி 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.இந்த வழக்கில் அரசு வக்கீலாக துரை முத்துராஜ் ஆஜரானார்.

Next Story