திருச்சி அருகே தனிமையில் இருந்த காதல் ஜோடியை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 பேர் கைது


திருச்சி அருகே தனிமையில் இருந்த காதல் ஜோடியை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2019 11:15 PM GMT (Updated: 31 Oct 2019 6:52 PM GMT)

தனிமையில் இருந்த காதல் ஜோடியை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். உயிருக்கு பயந்து கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.

திருச்சி,

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஜூவித்குமார் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கிப்படித்த இவர், துறையூரில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றார். அப்போது அவருக்கும், அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. அந்த பெண் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.

காதல் ஜோடி இருவரும் நேற்று முன்தினம் திருச்சி அருகே உள்ள நெ.1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திற்கு கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி மாங்காடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் கோகுல் (வயது 23), மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தேவிமங்கலம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் கலையரசன் (22) ஆகிய 2 பேரும் காதல் ஜோடியை ரகசியமாக படம் பிடித்துள்ளனர். பின்னர், அவர்களிடம் சென்று தனிமையில் இங்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டதுடன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஜூவித்குமாரை அவர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஜூவித்குமார், நான் சமாளித்து கொள்கிறேன், நீ இங்கிருந்து சென்றுவிடு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே ஜூவித்குமார் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் குதித்தார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சினை செய்த 2 வாலிபர்களையும் பிடித்து கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து கோகுல், கலையரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

என்ஜினீயரிங் மாணவர் ஆற்றில் குதித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று தேடினர். நீண்டநேரம் தேடியும் மாணவரை மீட்க முடியவில்லை. இரவு நேரம் ஆனதால் தேடும் பணி அத்துடன் நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜூவித்குமாரை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜூவித்குமாரின் தந்தை செந்தில்குமார், தாய் உமாமகேஸ்வரி, அண்ணன் செல்வகுமார், சித்தி தனலட்சுமி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் நேற்று காலை கொள்ளிடம் பாலத்தில் திரண்டனர். அப்போது தண்ணீரில் ஜூவித்குமாரை தேடுதல் பணியை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று ஜூவித்குமாரை தேடியபோது, பொன்னுரங்கபுரம் என்ற இடத்திற்கு அருகில் கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஜூவித்குமாரின் பை மட்டும் கிடைத்தது. அதனை போலீசார் சோதனை செய்தபோது கல்லூரி புத்தகம், அடையாள அட்டை, உடைகள், 2 செல்போன்கள், காதலியின் கைப்பை, டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து லால்குடி அருகே உள்ள கூகூர் வரை 14 கி.மீ.தூரம் வரை சென்று தேடியும் மாணவரை உயிருடன் மீட்க முடியவில்லை. இதனால், அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி இன்று(வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் கூறுகையில், ஜூவித்குமாருக்கு நீச்சல் தெரியும். இதனால் அவர், தண்ணீரில் குதித்திருந்தாலும் நீந்தி கரை சேர்ந்து இருப்பார். அவரை சம்பந்தப்பட்ட 2 பேரும் தாக்கி ஆற்றில் வீசி இருக்கின்றனர் என குற்றம் சாட்டினர்.

Next Story