அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டம் தொடரும் - டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு


அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டம் தொடரும் - டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 4:15 AM IST (Updated: 1 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

அரசின் அடக்கு முறைக்கு அஞ்சாமல் போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, 

4 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று வழக்கமான பணியை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் அரசின் எச்சரிக்கையும் மீறி ஸ்டிரைக்கை தொடர்ந்துள்ளனர். இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் ராமசந்திரன், சதீஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. சொசைட்டி விதிகளின்படி எங்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எங்களையும் அழைத்து பேச வேண்டும்.

ஆனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அரசு பணியிடமாற்றம் செய்வது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 4 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் அரசோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி எங்களது போராட்டத்தை திசை திருப்பி வருகிறது.

பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். வேலை நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இன்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 200-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை நாங்கள் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாக்டர்கன் 7-வது நாளாக கிருஷ்ணகிரி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story