பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளங்கி அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சீரமைப்பு பணியில் ஈடுபட கொடைக்கானலுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் ஆங்காங்கே மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கொடைக்கானல்-வத்தலக் குண்டு மலைப்பாதையில் உள்ள மச்சூர் என்ற இடத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினரும், வனத்துறையினரும் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
கொடைக்கானலை அடுத்துள்ள பள்ளங்கி கிராமத்தில் இருந்து கோம்பை செல்லும் வழியில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்திற்காக அந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது பெய்த மழையால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் அந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல் கொடைக் கானல் நகரில் பெய்த தொடர் மழையால் நாயுடுபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அருகில் இருந்த கடை சேதமடைந்தது.
பலத்த மழை எதிரொலியாக, கொடைக்கானலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மட்டும் செயல்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, தேர்வுகள் நடைபெற்று வருவதால் கல்லூரி செயல்பட்டதாக தெரிவித்தனர்.
கொடைக்கானலில், 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், குப்பமாள்பட்டி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக கானல்காட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 45), ராஜேஸ்வரி (52), சரஸ்வதி (45), மங்களம்கொம்பு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மாரிமுத்து (35) ஆகியோர் வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த காமனூர் ஊராட்சி செயலர் சண்முகபிரியா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று இடிந்த வீட்டை பார்வையிட்டனர்.
கொடைக்கானலை அடுத்த பெரும்பாறை அருகே கல்லக்கிணறு கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் 300 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்காக கல்லக்கிணறு ஆறு ஓடுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த ஆற்றை கடக்க பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். கரையின் இருபுறத்திலும் கயிறு கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கர்ணம் தப்பினால் மரணம் என்று சொல்வதை போல, சிறிது வழுக்கினாலும் மழைவாழ் மக்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைப்பதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 40 போலீசார், இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் கொடைக்கானல் நகருக்கு வருகை புரிந்துள்ளனர்.
இக்குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மண்சரிவு ஏற்பட்ட இடங்களிலும், மரங்கள் சாய்ந்துள்ள இடங்களிலும் நேரடியாக பார்வையிட்டு கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆலோசனையின்பேரில் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்குவார்கள்.
மழைக்காலம் முடியும் வரை பேரிடர் மீட்பு படையினர் கொடைக்கானலில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story