ஆட்சியில் சமபங்கு என்பதில் முதல்-மந்திரி பதவியும் அடங்கும் சிவசேனா சொல்கிறது


ஆட்சியில் சமபங்கு என்பதில் முதல்-மந்திரி பதவியும் அடங்கும் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 31 Oct 2019 10:45 PM GMT (Updated: 31 Oct 2019 8:09 PM GMT)

ஆட்சியில் சமபங்கு என்பதில் முதல்-மந்திரி பதவியும் அடங்கும் என்று சிவசேனா கூறி உள்ளது.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனாவுடன் சேர்ந்து மீண்டும் கூட்டணி அரசை அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் சிவசேனா ஆட்சியில் சமபங்கு கோருவதால் ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், மராட்டிய நலன்கருதி பா.ஜனதா கூட்டணி நீடிப்பது அவசியம் என்று கூறியிருந்தார். இதனால் பா.ஜனதாவுடன் இணக்கமான நிலையை சிவசேனா எடுத்ததாக கூறப்பட்டது. விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என நம்பப்பட்டது. ஆனால் நேற்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கம், முதல்-மந்திரி பதவி கோரிக்கையை கைவிடவில்லை என்பதை நினைவுப்படுத்தியது.

இது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து பதவிகளும் சமமாக பிரித்துக்கொள்ளப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் தெரிவித்து இருந்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உடன்பாட்டை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியிருந்தார். ஆனால், தற்போது ஆட்சியில் சமபங்கு என்பதில் முதல்-மந்திரி பதவி வராது என கூறினால், அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டி இருக்கும்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திறமையாக செயல்பட்டோம். ஆனால் பா.ஜனதா எங்களை மீண்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய முயற்சி செய்கிறது. ஆனால் நாங்கள் எளிதாக வீழ்ந்துவிட மாட்டோம். எங்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற எண்ணிக்கையை வைத்து விளையாடிக்கொண்டு இருப்பதை விட இரு கட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை பின்பற்றுவதே மிக முக்கியமானதாகும்.

முடிவு செய்யப்பட்டதை காட்ட எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனால் உறுதிமொழியின் கீழ் பொய் கூறும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story