கள்ளக்குறிச்சியில், பெண் போலீஸ் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு - நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கள்ளக்குறிச்சியில், பெண் போலீஸ் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு - நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:15 PM GMT (Updated: 31 Oct 2019 8:15 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் பெண் போலீஸ் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி ஜெயா கார்டன் பகுதியில் வசிப்பவர் ரெபேக்கா (வயது 46). இவர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரெபேக்கா தனது வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரெபேக்கா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர் களிடம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீஸ் வீட்டில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெண் போலீஸ் வீட்டிலேயே மர்மநபர்கள் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story