புதுச்சத்திரம் அருகே வாலிபர் படுகொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


புதுச்சத்திரம் அருகே வாலிபர் படுகொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:15 PM GMT (Updated: 31 Oct 2019 9:14 PM GMT)

புதுச்சத்திரம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் போத்தநாயக்கர். இவரது மகன் வெங்கடாசலம் (வயது 29). இவர்கள் புதுச்சத்திரத்தில் ஓட்டல் நடத்தி வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி வெங்கடாசலம் புதுச்சத்திரத்தில் உள்ள பழைய நூற்பாலை அருகே லுங்கியால் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வெங்கடாசலம் கல்லூரி வாலிபர் ஒருவருடன் காட்டுப்பகுதியில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதும், அப்போது அங்கு வந்த பாய்ச்சலை சேர்ந்த இளங்கோ (34), ஆனந்த் (32), நொச்சிப்பட்டி ரவிச்சந்திரன் (28) ஆகிய 3 பேருக்கும், வெங்கடாசலத்திற்கும் தகராறு ஏற்பட்டு, கொலை சம்பவம் நடந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளங்கோ உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட இளங்கோ, ஆனந்த் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கும் நீதிபதி இளவழகன் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Next Story