மாவட்ட செய்திகள்

தொடர் மழை காரணமாக, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தடுப்பணை நிரம்பியது + "||" + Due to continuous rain, Flooding in the Kunikampattu Sankaraparani River

தொடர் மழை காரணமாக, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தடுப்பணை நிரம்பியது

தொடர் மழை காரணமாக, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தடுப்பணை நிரம்பியது
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் புதுச்சேரி மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்கிறது.
திருக்கனூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் நேற்று 3-வது நாளாக மாலையில் மழை பெய்தது. தொடக்கத்தில் தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. பின்னர் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.

இந்த மழையின் காரணமாக திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தாழ்வான பகுதியில் இருந்த விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி அதில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

மேலும் திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டு மற்றும் மணலிப்பட்டு கிராமங்களுக்கிடையே பாயும் சங்கராபரணி ஆற்றில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் இரண்டு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பாய்ந்தோடியது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தகவல் பரவியதும் கூனிச்சம்பட்டு மற்றும் மணலிப்பட்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வெள்ளப்பெருக்கை வேடிக்கைப்பார்க்க ஆற்றுக்கு சென்றனர். அந்த கிராமங்களை சேர்ந்த பல இளைஞர்கள் ஆற்றில் வெள்ளத்தில் குதித்து சாகசங்களை செய்து உற்சாகமடைந்தனர்.

இந்த ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களான கூனிச்சம்பட்டு மற்றும் மணலிப்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் ஆற்றுக்கு நடுவே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் ஆற்றில் செல்லும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. தற்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

தடுப்பணை நிரம்பி உள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக பகுதியில் உள்ள வீடுர் அணை நிரம்பினால், அணையில் இருந்து கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதன் பிறகு ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கராபரணி ஆற்றில், தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே இருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.