கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2019 9:30 PM GMT (Updated: 2019-11-01T21:56:46+05:30)

செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த அத்தைகொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பின்புறம் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில், செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அங்கு சுமார் 6 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது.

இதற்கிடையே அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகில் பள்ளிக் கூடம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு அதிக கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததால், அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப் பட்டது.

இதற்கிடையே அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சுமார் 6 அடி ஆழ பள்ளத்தில் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனே மூட வேண்டும். அங்கு எக்காரணம் கொண்டும் செல்போன் கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, பொதுச்செயலாளர் பரமேசுவரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜோதிபாசு, குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story