தானாக பின்னோக்கி நகர்ந்ததால், திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ
சேலத்தில், தானாக பின்னோக்கி நகர்ந்ததால் திருமணிமுத்தாற்றில் தலைகீழாக ஆட்டோ கவிழ்ந்தது.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்றார். பின்னர் பயணிகளை இறக்கிவிட்டு, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு ஆட்கொல்லி பாலம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றின் ஓரத்தில் நிறுத்தினார்.
பின்னர் அங்கு உள்ள ஒரு கடைக்கு ஆட்டோவிற்கு ஆயில் வாங்குவதற்கு சென்றார். அவர் சென்ற சில நொடிகளில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ திடீரென்று தானாக பின்னோக்கி நகர்ந்தது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சத்தம் போட்ட படி ஆட்டோவை தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் இப்ராகிமும் ஓடி வந்தார்.
ஆனால் நகர்ந்த ஆட்டோவை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பின்னர் ஆட்டோ திருமணிமுத்தாற்றில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ தானாக பின்னோக்கி நகர்ந்து திருமணிமுத்தாற்றில் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story