சென்னையில், அரசு பஸ்-கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி 13 பேர் படுகாயம்


சென்னையில், அரசு பஸ்-கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:30 PM GMT (Updated: 2019-11-03T01:42:00+05:30)

சென்னை பாடி அருகே அதிகாலையில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதிய பயங்கர விபத்தில், பஸ் கண்டக்டர் பலியானார். டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்குன்றம்,

ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையிலிருந்து தமிழ்நாடு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு புறப்பட்டு சுமார் 30 பயணிகளுடன் சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சை செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி (வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். இதில் கண்டக்டராக செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் குமரன் தெருவைச் சேர்ந்த வீரமுத்து (53) என்பவர் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் சென்னை பாடி 200 அடி சாலை தாதங்குப்பம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆந்திராவில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் எதிர் பாராதவிதமாக பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதையடுத்து, பஸ்சில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் பஸ் டிரைவர் கோவிந்தசாமி, பஸ்சில் இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த மற்றொரு அரசு பஸ் டிரைவர் அருள்தாஸ் (52), பயணிகள் ஜெகநாதன் (31), வர்கிஸ் (33), சந்திரசேகர் (30), கிருஷ்டம்மா (53), வெங்கடைய்யா (68), வெங்கடேஸ்வரலு (48), சீனிவாசன் (57), டேவிட் (48), சுரேஷ் (30), ஜானி (25), தேவகி (55) ஆகிய 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அரி உள்ளிட்ட போலீசார், மீட்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு படுகாயமடைந்து வலியால் அலறி துடித்த 13 பேரையும் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கன்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story