கோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு


கோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 9:02 PM GMT)

கோத்தகிரியில் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட காய்கறி குளிரூட்டும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளை அதிக பரப்பளவில் சாகுபடி செய்து உள்ளனர். இவர்கள் விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த காய்கறிகளை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கோத்தகிரியில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். விளைபொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு, காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சியடைவது மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு காரணங்களால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.

இதுமட்டுமின்றி கோத்தகிரி பகுதியில் காய்கறிகள் குளிரூட்டும் நிலையமோ அல்லது குளிர்சாதன கிடங்கு வசதியோ இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் கேரட், பீட்ரூட் காய்கறிகளை கழுவுவதற்கு அரசு சார்பில் எந்திரங்கள் அமைக்கப்படாததால் தனியாருக்கு சொந்தமான காய்கறி கழுவும் எந்திரங்கள் வைத்துள்ளவர்களிடம் கொண்டு சென்று அதிக கட்டணம் செலுத்தி கழுவி வந்தனர். அதனால் கோத்தகிரியில் காய்கறிகள் குளிரூட்டும் நிலையம் மற்றும் குளிர்சாதன கிடங்கு வசதி வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.10 கோடி

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் வேளாண் விற்பனை, வணிகத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.10 கோடி செலவில் கோத்தகிரி மற்றும் எஸ்.கைகாட்டி பகுதிகளில் காய்கறிகள் குளிரூட்டும் நிலையம் மற்றும் விவசாய பல்நோக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கிய கட்டிட பணிகள் நிறைவடைந்தது. இந்த கட்டிடங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தநிலையில் விவசாய பல்நோக்கு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள காய்கறி கழுவும் எந்திரம், பேக்கிங் செய்யும் எந்திரம் மற்றும் காய்கறிகளை காற்றின் மூலம் உலர்த்தும் எந்திரம் ஆகியவற்றில் காய்கறிகளை இட்டு சோதனை ஓட்டத்தை தோட்டக்கலை துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதேபோல கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் உள்ள எந்திரங்களில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு வேளாண் சங்கத்தின் பொது மேலாளர் ஷாநவாஸ், வேளாண் விற்பனை துறை அலுவலர் ரவிசந்திரன், கோத்தகிரி தோட்டக்கலை துறை அலுவலர் சந்திரன், உழவர் உற்பத்தியாளர் குழுவின் இயக்குனர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு நவீன எந்திரங்கள் மூலம் காய்கறிகள் கழுவப்படுவதையும், அவை காற்றின் மூலம் உலர்த்தப்பட்ட பெட்டிகளில் அடுக்கப்படுவதையும் ஆய்வு செய்தனர். மேலும் காய்கறிகள் குளிரூட்டும் நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story