6 அல்லது 7-ந் தேதியில் புதிய அரசு பதவி ஏற்கும் - பாரதீய ஜனதா மந்திரி நம்பிக்கை


6 அல்லது 7-ந் தேதியில் புதிய அரசு பதவி ஏற்கும் - பாரதீய ஜனதா மந்திரி நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2019 4:45 AM IST (Updated: 3 Nov 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 6 அல்லது 7-ந் தேதியில் புதிய அரசு பதவி ஏற்கும் என பாரதீய ஜனதா மந்திரி சுதீர் முங்கண்டிவார் நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகி உள்ள நிலையில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது.

ஆட்சி அமைப்பதில் பாரதீய ஜனதாவுடன் மோதல் போக்கு நீடிப்பதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது.

இதேசமயம் நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், “தேர்தலில் நாங்கள் (பாரதீய ஜனதாவுடன்) கூட்டணி வைத்து போட்டியிட்டோம். எனவே நாங்கள் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற கடைசிவரை முயற்சிப்போம்” என கூறினார். இப்படி “சிவசேனா மதில்மேல் பூனையாக ” ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சிகளையும் திக்குமுக்காட செய்யும் வேளையில், பாரதீய ஜனதாவை சேர்ந்த நிதி மற்றும் வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மராட்டியத்தில் 10-ந் தேதிக்குள் புதிய அரசு அமையும். வருகிற 6 அல்லது 7-ந் தேதி சிவசேனாவுடன் கூட்டணி அரசு அமைய வாய்ப்பு உள்ளது. மக்களின் தீர்ப்பை மதித்து நடப்பது பாரதீய ஜனதா மற்றும் சிவசேனாவின் கடமையாகும். மந்திரி பதவிகளை எப்படி பகிர்ந்துகொள்வது என்பது குறித்து பேசி முடிவெடுத்து கொள்ளலாம். பாரதீய ஜனதா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.

ஒருவேளை புலியின் (சிவசேனாவின் அடையாளம்) ஆதிக்கம் வளர்ந்துகொண்டே சென்றால், நான் வனத்துறை மந்திரி. எங்களுக்கு புலிகளை எப்படி காப்பாற்றுவது, பராமரிப்பது என்று தெரியும். நாங்கள் புலிகளை எங்களுடன் இணைத்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story