காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு


காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2019 3:50 AM IST (Updated: 3 Nov 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

காந்தியின் கொள்கைகளை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி. கூறினார்.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழா நேற்று நடந்தது. முஸ்லிம் கல்வி கமிட்டியின் செயலாளர் முகமது மீரா முகைதீன் தலைமை தாங்கினார். தலைவர் அப்துல் காதர், துணை தலைவர் முகமது அலி அக்பர், பள்ளி தலைமை ஆசிரியர் சேக்முகமது, கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜெஸிந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத் வரவேற்று பேசினார்.

கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, “காந்தியம் காப்போம்“ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது வாட்ஸ்அப், முகநூல், இணையதளம் மூலம் உடனுக்குடன் செய்திகள் பரவும் காலம். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தியை பற்றி ஏன் நினைக்க வேண்டும் என சிலர் நினைக்கலாம். தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் விட்டு சென்ற செய்தி எதிர்காலத்திலும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.

சிறந்த தலைவர்கள் வழியை பின்பற்றினால் தான் நாமும் சிறந்தவர்களாக இருக்க முடியும். காந்தியடிகள் மனிதநேயம், எளிமை, அன்பு, அகிம்சை போன்ற கொள்கைகளை கடைபிடித்தவர்.

இந்த சமூகத்தில் அனைத்து சாதி, மதம், இனம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று காந்தி போராடினார். ஆனால் சிலர் ஒரே சமுதாயம், ஒரே மதம் என்ற நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அனைத்து சாதி, மதங்களையும் உள்ளடக்கியது. அனைத்து கலாசாரத்தையும், பண்பாட்டையும் உள்ளடக்கியது இந்தியா. தமிழ்மொழி நம்மை ஒருங்கிணைத்துள்ளது.

நம்மை சுற்றி நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்கும்போது தான் சிறந்த தலைவர்கள் உருவாகுகிறார்கள். சமூக அவலங்களை தட்டிக்கேட்டதால் தந்தை பெரியார், மகாத்மா காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர், கருணாநிதி போன்ற தலைவர்கள் உருவானார்கள். அந்த தலைவர்களின் கொள்கைகளை எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் நாடு வளர்ச்சி அடையும். அந்த வகையில் பார்த்தால் தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள். அவர்களின் உரிமைகளும் நிலை நாட்டப்பட்டது.

வருங்கால இந்தியாவை உருவாக்குபவர்கள் மாணவர்கள். நீங்கள் காந்திய சிந்தனைகளையும், கொள்கையையும் கடைபிடிக்க வேண்டும். சாதி, மதம் பேதம் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். அப்படி நீங்கள் வாழ்ந்தால் சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லட்சுமணன், நெல்லை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப், மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகமது இல்யாஸ் நன்றி கூறினார்.

Next Story