அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் தூர்வாரப்படாத கள்ளப்பெரம்பூர் ஏரி


அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் தூர்வாரப்படாத கள்ளப்பெரம்பூர் ஏரி
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:15 PM GMT)

அரசியல் குறுக்கீடு காரணமாக நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகியும் கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரப்படவில்லை என்று நீர்வள பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றம் சாட்டி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு கூட்டியக்க கூட்டம் தஞ்சையில் நேற்று என்ஜினீயர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. நாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், வக்கீல் குருசாமி, பாலகிருஷ்ணன், அ.ம.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ரவி நன்றி கூறினார்.

அகற்ற வேண்டும்

பின்னர் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் நிருபர்களிடம் கூறுகையில், “நீர்வள பாதுகாப்பு கூட்டியக்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் தன்னார்வ அமைப்புகள், விவசாய அமைப்புகள் என 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன. தற்போது மாவட்டம் வாரியாக அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது தான். நாங்கள் ஆறு, வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரும் பணிகளை செய்து வருகிறோம். இந்த அமைப்பு சார்பில் பல ஏரிகளை தூர்வார உள்ளோம்.

அரசியல் குறுக்கீடால் தூர்வாரப்படவில்லை

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் ஏரியை தூர்வார திட்டமிட்டு பாசனதாரர் சங்கம் அமைக்கப்பட்டு ரூ.9 லட்சம் நிதி திரட்டப்பட்டு கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அதன்படி அரசும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசியல் குறுக்கீடு காரணமாக இன்னும் ஏரி தூர்வாரப்படவில்லை.

இந்த ஏரி 645 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி அளித்து வருகிறது. இந்த ஏரியில் நீர் நிரப்பினால் தஞ்சை முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அரசு இதனை செய்ய வலியுறுத்துவோம். இல்லாவிட்டால் எங்கள் அமைப்பு சார்பில் தூர்வாருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படும்”என்றார்.

Next Story