பயிர்சேதம் அடைந்த பகுதிகளை முதல்-மந்திரி பட்னாவிஸ் பார்வையிட்டார் - நிதி உதவி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி


பயிர்சேதம் அடைந்த பகுதிகளை முதல்-மந்திரி பட்னாவிஸ் பார்வையிட்டார் - நிதி உதவி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி
x
தினத்தந்தி 4 Nov 2019 4:45 AM IST (Updated: 4 Nov 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

பயிர்சேதம் அடைந்த பகுதிகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார். மேலும் நிதி உதவி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் சில மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நேற்று மந்திரி சபை துணைக்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், பயிர்சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இந்த நிலையில் நேற்று அவர் அகோலாவில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன். அவர்களுக்கு அரசு உதவி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

எங்கள் அரசு ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த நிலையில் வறட்சிநிலை போல கருதி வரும் 6-ந் தேதிக்குள் சேதமதிப்பை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். மேலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பாலமாக செயல்படுமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன். இதனால் விரைவாகவும், அதிகபட்ச தொகையையும் அவர்கள் பெறுவார்கள். ஒரு விவசாயி கூட நிதி உதவி இழக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் அவர்களிடம் கூறியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று(திங்கட்கிழமை) டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பயிர்சேதம் குறித்து பேசுவார் என தெரிகிறது.
1 More update

Next Story