ஜிப்மர் டாக்டர் வீட்டில் திருடிய வாலிபர் கைது


ஜிப்மர் டாக்டர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2019 3:55 AM IST (Updated: 4 Nov 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் ஜிப்மர் டாக்டர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா கல்ரா (வயது 34), ஜிப்மர் மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், புதுச்சேரி கேப்டன் மரிய சேவியர் வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.

கடந்த 1-ந் தேதி இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்று தூங்கினார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள கதவை திறந்து வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.6 ஆயிரம் ரொக்கம், 900 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.63 ஆயிரம்) ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் யாரோ மாடியில் திறந்து கிடந்த கதவு வழியாக வீட்டுக்குள் புகுந்து பணம், செல்போனை திருடி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பெரியகடை போலீசில் சித்தார்த்தா கல்ரா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது ஆம்பூர் சாலையில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் செஞ்சி சாலையில் நடைமேடை பகுதியில் வசித்து வந்த விஜய் (21) என்பதும், டாக்டர் சித்தார்த்தா கல்ராவின் வீட்டில் திருடியது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ரூ.6 ஆயிரம், 900 அமெரிக்க டாலர் மற்றும் 2 செல்போன்களை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

Next Story