குளங்கள், ஊருணியை 2-வது கட்டமாக சீரமைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்


குளங்கள், ஊருணியை 2-வது கட்டமாக சீரமைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2019 10:30 PM GMT (Updated: 4 Nov 2019 3:57 PM GMT)

குளங்கள், ஊருணிகளை 2-வது கட்டமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை, 

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் குடிமராமத்து பணி நடைபெற்று வருவதை கலெக்டர் ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள குளங்கள் மற்றும் சிவகங்கை நகராட்சி பகுதிகளிலுள்ள ஊருணிகளில் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் 4 ஆயிரத்து 464 சிறுபாசன குளங்கள் மற்றும் 4 ஆயிரத்து 325 ஊருணிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 500 சிறுபாசன குளங்கள் மற்றும் 2 ஆயிரத்து 300 ஊருணிகள் ரூ.38 கோடி மதிப்பில் குடிமராமத்து பணியினை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்றுள்ளன.

முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, பொதுப்பணித்துறையின் மூலம் கடந்த 2 மாதகாலமாக பாசன கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக, தற்போது ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஊராட்சி பகுதிகளில் இந்த பணிகள் கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு முடியும் நிலையில் உள்ளன.

இதையடுத்து 2-வது கட்டமாக மீதமுள்ள குளங்கள், ஊருணிகளில் சீரமைப்பு செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி திட்ட பொறியாளர் முருகன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story