பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் அரசு நிதி உதவியுடன் மழைநீர் சேகரிப்பு - கலெக்டர் தலைமையில் செயல்விளக்கம்
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை அரசு நிதி உதவியுடன் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுவது குறித்து கலெக்டர் தலைமையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டத்தில் பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை அரசு நிதிஉதவியுடன், பாதுகாப்புடன் கூடிய மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுவதற்கான செயல்விளக்கம், தேனி அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சி ஏ.மீனாட்சிபுரத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் இந்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜவஹரிபாய், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த பணிகள் குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் சுரங்கவாயிற்று குழி அமைத்து வடிகட்டி மூலம் நீரை செறிவூட்டுதல் அமைத்து, மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக கிணற்றை சுற்றி 5 அடி முதல் 10 அடி அகலத்தில், 5 அடி ஆழத்தில் குழி ஏற்படுத்தி, அதில் கற்கள், மணல் போட்டு நீர்வடிகட்டும் படுகை அமைக்கப்படும். அதன் மூலம், மழைநீரை குழாய் வழியாக ஆழ்துளை கிணற்றில் செலுத்தும் அமைப்பு அமைக்கப்படும்.
மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனிநபர் நிலங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர் விவசாயிகள் தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த ரூ.22 ஆயிரம் மற்றும் திறந்தவெளி கிணற்றில் செலுத்தும் அமைப்புக்கு ரூ.20 ஆயிரம் நிதியாக வழங்கப்படும்.
இவ்வாறு நீர்செறிவூட்டப்பட்ட ஆழ்துளை மற்றும் திறந்த வெளிக்கிணறுகளுக்கு அருகாமையில் தோண்டப்படும் ஆழ்துளை மற்றும் திறந்த வெளிக்கிணறுகள் மிகுந்த நீர் செறிவுடன் இருப்பதோடு குறைவான உவர்ப்புத்தன்மையுடன் அமைகிறது. ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story