திருத்துறைப்பூண்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் 5 பேர் கைது


திருத்துறைப்பூண்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம்( வயது52). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மேட்டுப் பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவரது உறவினர் மன்னார்குடியை சேர்ந்த முருகானந்தம் மனைவி ஜெயமாலினி. நிலம் தொடர்பாக மேட்டுப்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்த அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால்ராமன் என்பவருக்கும், ஜெயமாலினிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று ஜெயமாலினி வயலில் களை எடுக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த பணியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது கோபால்ராமன் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து பரமசிவத்தை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

5 பேர் கைது

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார், கோபால்ராமன் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதே ஊரை சேர்ந்த சேகர், ரவி, தாமஸ், அண்ணாதுரை, நாகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் காமராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, ஜெய லலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சீரளான், கூட்டுறவு சங்க தலைவர் குமார் ஆகியோர் மருத்துவமனையில் பரமசிவத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.


Next Story