ஓட்டப்பந்தயத்தில் சாதனை: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் ஒரு காலை இழந்த ராணுவ வீரர் பேட்டி


ஓட்டப்பந்தயத்தில் சாதனை: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் ஒரு காலை இழந்த ராணுவ வீரர் பேட்டி
x
தினத்தந்தி 4 Nov 2019 11:00 PM GMT (Updated: 4 Nov 2019 5:07 PM GMT)

சீனாவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கும்பகோணத்தை சேர்ந்த ராணுவ வீரர் 3 தங்க பதக்கங்களை வென்றார். கன்னி வெடியில் சிக்கி ஒரு காலை இழந்த இவர், ஒலிம்பிக்போட்டியில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜயா.

இவர்களது மகன் ஆனந்தன்(வயது 32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஆனந்தன் கடந்த 2005-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2008-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்பிரிவில் பணியில் இருந்தபோது, பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடி வெடித்ததில், ஆனந்தன் தனது இடது காலை இழந்தார். பின்னர் இடது காலுக்கு பதில் செயற்கையாக பிளேட் பொருத்தப்பட்டது. இதன்மூலம் நடை பயிற்சியையும், வேகமாக ஓடும் பயிற்சியையும் மேற்கொண்டார்.

தங்கம் வென்றார்

சிறு வயது முதல் தடகள போட்டியில் பங்கேற்ற ஆர்வத்தை கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். கடந்த மாதம் சீனாவில் 144 நாடுகள் பங்கேற்ற 7-வது உலக முப்படை ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆனந்தன் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று 3 தங்க பதக்கங்களை வென்றார்.

வரவேற்பு

இந்நிலையில் ஆனந்தன், நேற்று தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்தார். அவருக்கு கும்பகோணம் பகுதி அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆனந்தனை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வாகனத்தில் அழைத்து வந்து, அவர் படித்த நேட்டிவ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ஜான்ஸ்டீபன் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் மனோகரன்ஆகியோர் அனந்தனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

விழாவில் மாநில தடகள சங்க மாநில துணைத்தலைவரும், கும்பகோணம் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன், உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லட்சியம்

பின்னர் ராணுவ வீரர் ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவில் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கான உலக அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 144 நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களுக்கான தடகள போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளேன். அடுத்த ஆண்டு(2020) டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம்.

ஒலிம்பிக்போட்டியில் தங்கம் வென்று, உலக அளவில் நமது தேசியகொடிக்கு பெருமை சேர்ப்பேன். ஒவ்வொரு முறை வெல்லும்போதும் அந்தந்த நாடுகளில் நமது தேசிய கொடியோடு பரிசை பெறும்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியோடு இருப்பேன். தொடர்ந்து இந்திய தேசிய கொடிக்கு பெருமை சேர்ப்பேன். எனக்கு இதுவரை மத்திய- மாநில அரசுகள் உதவாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எனக்கு வேண்டிய உதவிகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story