பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி அரசு பஸ்கள் சிறைபிடிப்பு


பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதுமலையில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. பள்ளி முடிந்ததும் மாலை முதல் இரவு வரை பள்ளி வளாகத்தில் அமர்ந்து சிலர் மது அருந்துகின்றனர். பின்னர், போதையில் மதுபாட்டில்களை பள்ளி வளாகத்தில் போட்டு உடைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

காலை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த மதுபாட்டில்களை சேகரித்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் கொட்டி வருகின்றனர். இந்த சம்பவம் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாலை முதல் இரவு வரை மதுவை வாங்கிக் கொண்டு பள்ளி வளாகத்திற்கு வந்த மதுபிரியர்கள் மதுஅருந்திவிட்டு போதையில் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து அட்டூழியம் செய்து விட்டு சென்றுள்ளனர்.

அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் மது பாட்டில்கள் உடைந்து சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வகுப்பறைகளுக்கு சென்றால் கண்ணாடி துண்டுகள் காலில் குத்திவிடுமோ என்ற அச்சத்தில் அங்கேயே நின்றனர். இந்த செய்தி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவியது. உடனே பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், பள்ளியில் இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்து நேற்று காலை எதுமலை கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூரில் இருந்து எதுமலைக்கு வந்த அரசு பஸ்சையும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து எதுமலை வழியாக பெரகம்பிக்கு செல்லும் அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் 94 கரியமாணிக்கம் வருவாய் ஆய்வாளர் பிரியா, எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

அப்போது அதிகாரிகள் தரப்பில், அரசு பள்ளியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்களை பொதுமக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story