உலக வெப்பமயமாதல் குறித்து பொதுமக்கள்-மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


உலக வெப்பமயமாதல் குறித்து பொதுமக்கள்-மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

உலக வெப்பமயமாதல் குறித்து பொதுமக்கள் - மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொம்மிடியில் நடந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பா.ம.க. சார்பில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படை ஆகிய நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் பொம்மிடியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பால் கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விளக்கி பேசினார். கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலக வெப்பமயமாதல் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்காமல் போனால் இன்னும் 30 ஆண்டுகளில் இந்தியாவும், பாதிப்படையும். இது தொடர்பாக முதல் முதலில் டாக்டர் ராமதாஸ் தான் கவலை தெரிவித்து அறிக்கை விடுத்தார். உலக வெப்பமயமாதல் குறித்து பொதுமக்கள்-மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடும் கோபம்

தமிழகத்தில் பா.ம.க.வுக்கு ஒரு செல்வாக்கு உண்டு. நமது கட்சியின் மீது மக்களுக்கு நல்ல எண்ணமும், நம்பிக்கையும் உண்டு. நமது கட்சி தொண்டர்கள் மீது எந்த வழக்கும் வந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம். மு.க.ஸ்டாலின் செய்த பொய் பிரசாரத்தால் சித்தேரி மலையில் வசிக்கும் பொதுமக்கள் நகைகடன் தள்ளுபடி ஆகும் என்று எண்ணி 3 ஆயிரத்து 500 பேர் தங்களது நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து அதனை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். அவர்கள் தி.மு.க. மீது கடும் கோபத்தில் உள்ளனர். வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியோடு நின்று தேர்தலை சந்திக்கும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அப்போதைய வியூகத்தின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

இந்த கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அன்பழகன், பசுமைதாயகம் மாநில துணை செயலாளர் மாது, முன்னாள் மாவட்ட செயலாளர் இமயவர்மன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சின்னசாமி, மாவட்ட அமைப்பு செய லாளர் சேட்டு, பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராமசுந்தரம், இளைஞர் சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட செயலாளர் பச்சியப்பன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சேட்டு, கோவிந்தசாமி, செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் தம்பிதுரை நன்றி கூறினார்.

Next Story