265 ஊராட்சிகளுக்கு 60 லட்சம் விதைகள் - கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விதைப்பதற்கு 265 ஊராட்சிகளுக்கு மொத்தம் 60 லட்சம் விதைகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தை பசுமைமிக்க பகுதியாக உருவாக்கும் வகையில் விதைப்பந்து திருவிழா நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவில் கிராம ஊராட்சிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் மர விதைகளை அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.
விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 13 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 265 ஊராட்சிகளில் மொத்தம் 60 லட்சம் விதைகளுக்கு மேல் விதைக்கப்பட உள்ளன. இதில் சுமார் 50 சதவீத விதைகள் முளைத்தால் ஒவ்வொரு ஊராட்சிக்கு சராசரியாக 10 ஆயிரம் மரங்கள் கிடைக்கும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 வகையான நாட்டு மரங்களின் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகள், ஓடையின் ஓரங்கள், கோவில் இடங்கள், வனப்பகுதியின் எல்லைகள், புறம்போக்கு நிலங்கள், குளங்களின் கரைகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் விதைகள் விதைக்கப்பட உள்ளது.
வேங்கை, வேம்பு, வாகை, தேக்கு, நீர்மருது, தான்றி, மலைவேம்பு, குமிழ், பூச்சைக்காய், ஆச்சான், புங்கன், பூவரசு, புளி, இலுப்பை, கொடுக்காப்புளி, நெல்லி, நாவல், அத்தி ஆகிய மரங்களின் விதைகள், நுண்ணுயிர்கள், தேங்காய் நார் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்படுகிறது. இதில் கடின மரங்களும், பறவைகளுக்கான பழங்கள் தரும் மரங்களும், தேனீக்களை ஈர்க்கும் பூக்கள் உதிர்க்கும் மரங்களும் உள்ளன.
மரங்கள் வளரும்போது 3 ஆண்டுகளில் கூடுதல் மழைப்பொழிவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் முடியும். வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலாளர்கள் நல்ல முறையில் மர விதைகளை விதைத்து, பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், துணை கலெக்டர்(பயிற்சி) விஷ்ணுவர்த்தினி, உதவி திட்ட அதிகாரி கிரி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story