தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரிய வழக்கு: முதல்-மந்திரி பட்னாவிசுக்கு கோர்ட்டு நோட்டீஸ்
2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரிய வழக்கில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பை,
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில், அவர் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை மறைத்ததால், அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி வக்கீல் சதீஷ் உகேய் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவரின் மனு கீழ்கோர்ட்டு மற்றும் மும்பை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அவர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த வழக்கை கீழ் கோர்ட்டில் எதிர்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது.
அதனை ஏற்று நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழக்கை விசாரிக்க தொடங்கியது. இதையடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நேற்று கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மராட்டியத்தில் மீண்டும் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கோர்ட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story