ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 1:15 PM GMT)

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் விழூப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ரகோத்தமன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் குபேரன், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் மனோகரன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி சுமூகமாக முடிக்க வேண்டும், ஏற்கனவே ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1, 2, 3, கள்ளக்குறிச்சி பணிமனை 1, 2, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய பணிமனைகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Next Story