முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2019 10:45 PM GMT (Updated: 5 Nov 2019 3:28 PM GMT)

தேனி மாவட்டத்தில் முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதியோர்கள் இதுதொடர்பாக மனு அளிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறையின் சார்பில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மூத்தகுடிமக்களின் நலன் கருதி அவர்களை முறையாக பராமரித்து, பாதுகாப்பதற்கு ஏதுவாக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன், பராமரிப்பு சட்டம்-2007 மற்றும் விதிகள் 2009-ன் கீழ் எவ்வித வருமானமற்ற பெற்றோர்கள் முதிர்ந்த வயதில் தங்களின் இயல்பு வாழ்க்கையினை அதே நிலையில் தொடர்வதற்காக வாரிசுகளிடம் இருந்து பராமரிப்பு தொகை பெறுவதற்கு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் பராமரிப்பு தொகையானது உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை ஆகிய செலவுகளை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படுவதாகும். பராமரிப்பு தொகையாக அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த தங்களின் சொந்த பிள்ளைகளிடம் இருந்தும், பேரன், பேத்திகளிடம் இருந்தும் ஜீவனாம்சம் கோரலாம். பிள்ளையற்ற சொத்துடைய பெற்றோராயின் தங்கள் சொத்தின் உரிமைக்கான பங்கினை பெறும் உறவினர்களிடம் இருந்து ஜீவனாம்சம் கோரலாம்.

தேனி மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் ஆர்.டி.ஓ.வை தலைவராக கொண்டு உத்தமபாளையம், பெரியகுளத்தில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்தில் புகார் அளிக்க இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டத்தினை நடைமுறைபடுத்த மாவட்ட கலெக்டரின் கீழ் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெறப்படும் மனுக்கள் தொடர்பாக உடனுக்குடன் விசாரணை செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும். தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சமூகநலத்துறை களப்பணியாளர்கள் மூலம் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முதியோர்களை பராமரிக்காத வாரிசுகள் மீது இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்களை இந்த சட்டத்தின்கீழ் முறையாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் முதியோர் இல்லங்கள், உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தினை அணுகி விவரம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் அரசின் விதிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சப்-கலெக்டர்கள் வைத்திநாதன், சினேகா, உதவி கலெக்டர் (பயிற்சி) பாலச்சந்தர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story