தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு


தக்கலையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 4:16 PM GMT)

தக்கலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய செயலாளர் சஞ்சய்தத், வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தக்கலை,

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி, குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர்கள் ஜாண் கிறிஸ்டோபர், ஜெகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வசந்தகுமார் எம்.பி., , குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சஞ்சய்தத்

சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா அரசால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சி தடை பட்டுள்ளது. நாட்டில் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசின் மக்கள் விரோத போக்கை ஊராட்சிகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். மோடி 10 நாட்களுக்கு ஒருமுறை வெளிநாடு செல்கிறார். அவரது உண்மையான முகம் தொழில் அதிபர்களுக்கு உதவுவது ஆகும். இதற்கு எல்லாம் மாற்று காமராஜர் வழி ஆட்சி தான். காங்கிரஸ் சாதாரண மக்களின் பக்கம் தான் நிற்கும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

கோ‌ஷம்

ஆர்ப்பாட்டத்தின் போது, பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், யூசுப்கான், பினுலால் சிங், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story