அறந்தாங்கி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி


அறந்தாங்கி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-05T23:13:55+05:30)

அறந்தாங்கி அருகே மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, திருமயம், அன்னவாசல், கறம்பக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதேபோல அறந்தாங்கி பகுதியில் நேற்று முன்தினமும் மழை பெய்தது. மழையின் காரணமாக அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் வடக்கு பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது வீட்டின் சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தது.

பெண் பலி

இந்நிலையில் நேற்று சொக்கலிங்கத்தின் மனைவி அமராவதியை (வயது 55) தவிர குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் அனைவரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் அமராவதி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது ஈரப்பதத்துடன் காணப்பட்ட சுவர் இடிந்து அமராவதியின் மேல் விழுந்தது. இதில் அமராவதி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அமராவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

Next Story