காயத்துடன் போராடிய நல்லபாம்புக்கு அறுவை சிகிச்சை மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்பட்டது


காயத்துடன் போராடிய நல்லபாம்புக்கு அறுவை சிகிச்சை மீண்டும் காட்டுப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 7:02 PM GMT)

மதுரையில் காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த பாம்பினை காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ரோடு் முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடியது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அதன் பொறுப்பாளர்கள் அங்கு வந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் அவர்கள் அந்த பாம்பை பாதுகாப்பாக ஒரு பையில் எடுத்து போட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள பன்நோக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அறுவை சிகிச்சை

இதைதொடர்ந்து டாக்டர் பார்த்திபன் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது.

அந்த நல்ல பாம்பை காப்பாற்ற வேண்டும் என்றால் காயம் பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த பாம்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 2 மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது. இதற்காக அந்த பாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. காயம் இருந்த இடத்தில் தையல் போடப்பட்டு கட்டப்பட்டது.

காட்டுப்பகுதியில் விடப்பட்டது

சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அந்த பாம்பு நன்றாக ஊர்ந்து செல்கிறதா? என பரிசோதிக்கப்பட்டது. மேலும் ஆட்களை பார்த்ததும் சீறவும் தொடங்கியது. அது தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதை உறுதி செய்த கால்நடை மருத்துவர்கள், பின்னர் அந்த பாம்பை மீண்டும் ஊர்வனம் அமைப்பினரிடம் கொடுத்தனர்.

அவர்கள் அந்த பாம்பை, மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பி்ன்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப்்பகுதியில் அந்த நல்ல பாம்பை விட்டனர்.

Next Story