கரூரில் விஷ மாத்திரைகள் தின்று தாய்-மகன் தற்கொலை


கரூரில் விஷ மாத்திரைகள் தின்று தாய்-மகன் தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2019 4:45 AM IST (Updated: 6 Nov 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கரூரில், விஷ மாத்திரைகளை தின்று தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்,

கரூர் வெங்கமேடு புதுகுளத்துப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அமுதவல்லி (வயது 65). இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் ராஜரத்தினம்(35). ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ராஜரத்தினத்துக்கு மகாலட்சுமி என்கிற மனைவியும், ஸ்ரீநாத் என்கிற மகனும் உள்ளனர். அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுதவல்லி வீட்டில் திடீரென தவறி விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால், அவர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்.

தாய்-மகன் தற்கொலை

நேற்று முன்தினம் இரவும் அமுதவல்லிக்கு இடுப்பில் வலி ஏற்பட்டது. இதனால், வேதனையின் உச்சத்துக்கே சென்ற அமுதவல்லி விஷ மாத்திரைகளை தின்றார். இதனை அறிந்த ராஜரத்தினம், தாய் இல்லாத உலகத்தில் தன்னால் மட்டும் எப்படி வாழ முடியும் என வேதனை அடைந்து அவரும் விஷ மாத்திரைகளை தின்றார். நேற்று காலை எழுந்து பார்த்த மகாலட்சுமி, அமுதவல்லி இறந்து கிடப்பதை பார்த்தும், கணவர் ராஜரத்தினம் மயங்கி கிடப்பது கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜரத்தினத்தை மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர், அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில், தாயும்-மகனும் தற்கொலை செய்ததை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story