பாளையங்கோட்டையில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நேற்று பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சாமுவேல் ஐசக் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மின்வாரிய 60-வது ஆண்டு வைர விழாவையொட்டி பரிசாக 3 சதவீதம் ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக நீடித்திட வேண்டும். பணிக்கொடை சட்டப்படி வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனே நீக்க வேண்டும். அடையாள அட்டை கிடைக்காதவர்களுக்கு உடனே அடையாள அட்டை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் நேசகுமாரி மல்லிகா, துணை பொதுச்செயலாளர் ராஜாமணி, மாவட்ட செயலாளர் கருப்பையா, பொருளாளர் வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story