திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவம் பார்த்த தம்பதி கைது


திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவம் பார்த்த தம்பதி கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 4:45 AM IST (Updated: 6 Nov 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி மருத்துவம் பார்த்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 42). இவரது மனைவி கிராந்தி (35). இவர்கள் இருவரும் பி.ஏ. படித்தவர்கள். முரளி தன்னுடைய வீட்டின் முன்புறம் மருந்து கடை நடத்தி வருகிறார்.

மேலும் வீட்டில் இவர்கள் இருவரும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று மாலை பள்ளிப்பட்டுக்கு சென்றனர்.

மருந்து கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அறையில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான ஊசிகள், மருந்துகள் கிடைத்தன. மேலும் முரளியும், அவரது மனைவி கிராந்தியும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர்களான முரளி, கிராந்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட முரளி கடந்த ஆண்டும், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு வந்த உத்தரவின்பேரில், மாவட்ட சுகாதாரத்துறை காசநோய் பிரிவு துணை இயக்குனர் லட்சுமி முருகன் தலைமையிலான குழுவினர் திருத்தணியில் உள்ள அமிர்தாபுரம் திருவள்ளூவர் தெருவுக்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி (43) லேப் டெக்னிசியன் படித்து விட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து மருத்துவ குழுவினர் வேளாங்கன்னியை அழைத்துச் சென்று திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் வேளாங்கன்னியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் போலி டாக்டர் இருப்பதாக வந்த தகவலின் பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் கோட்டை தெருவில் தனியார் கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

டாக்டர் தொழில் செய்து வருபவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் பி.காம். பட்டதாரியான சென்னை எர்ணாவூர் பாரதி நகரை சேர்ந்த பழனிசாமி (63) மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதார நல குழுவினர் போலி டாக்டரான பழனிசாமியை திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பழனிசாமியை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story