பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை அதிகாரிகள் பாராமுகம்


பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை அதிகாரிகள் பாராமுகம்
x
தினத்தந்தி 6 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பல்வேறு மனுக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், தொடர்புடைய துறை அதிகாரிகளிடமும் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. மதுரை ஐகோர்ட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்ட போதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொதுப்பாதை

மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர், அருந்ததிய சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் பொதுப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய்த்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரியிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனிநபர் ஒருவர் குடியிருப்புக்கான பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்றக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்த நிலையில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசியும், எவ்வித பலனும் ஏற்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் விருதுநகர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாச்சியார்பட்டி கிராமத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் 25 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

வி.குமாரபுரம்

விருதுநகர் அருகே வி.குமாரபுரம் கிராமத்தில் கிராம பொதுப்பாதையில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு போட்டுள்ளதாகவும், அதனை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததில் 2 வாரங்களில் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்ட போதிலும் 11 மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததோடு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

பாராமுகம்

இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் கிராமப்புறங்களில் குறிப்பாக ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகமும், ஐகோர்ட்டும் உத்தரவிட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.

பொதுப்பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாததால் கிராம பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அனைத்து சமுதாயத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் நிலையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இல்லாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.

கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை உரிய முறையில் ஆய்வு செய்து அவற்றை அகற்ற பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.



Next Story