தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி பதவி ஏற்பு - ‘மக்கள் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவேன்’ என உறுதி
தேனி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி நேற்று பதவி ஏற்று கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவேன் என்று அவர் உறுதி அளித்தார்.
தேனி,
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பாஸ்கரன், சென்னை பூந்தமல்லி சிறப்பு பட்டாலியன் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், சென்னை புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனராக இருந்த சாய்சரண் தேஜஸ்வி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தேனி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்சரண் தேஜஸ்வி நேற்று பதவி ஏற்று கொண்டார். அவரிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாஸ்கரன் நேற்று காலை பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய போலீஸ் சூப்பிரண்டுவுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர் களிடம் கூறியதாவது:-
நான் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றேன். திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றேன். பின்னர், கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். அங்கிருந்து சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு அங்கு 1½ ஆண்டு காலம் பணியாற்றினேன்.
தற்போது தேனி மாவட்ட மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே தென்மாவட்டங்களில் நான் பணியாற்றிய அனுபவம் உள்ளதால் இப்பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை அறிந்துள்ளேன். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். பொது அமைதிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறும், மக்கள் பாதுகாப்பிலும் தனிக்கவனம் செலுத்துவேன்.
மக்களின் ஒத்துழைப்போடு சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், ஏற்கனவே நடந்த குற்றங்களில் தொடர்புடையவர்களை பிடிக்கவும் தனிக்கவனம் செலுத்தப்படும்.
மக்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்யும் சேவகராக போலீஸ் துறையினர் இருப்பார்கள். மக்கள் அளிக்கும் மனுக்களின் உண்மைத்தன்மையை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளை தடுக்க பிற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story