குமரி மாவட்டத்தில் சாலைகளை 16-ந்தேதிக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு


குமரி மாவட்டத்தில் சாலைகளை 16-ந்தேதிக்குள் சீரமைக்காவிட்டால் போராட்டம் கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:00 PM GMT (Updated: 6 Nov 2019 2:48 PM GMT)

குமரி மாவட்டத்தில் 16-ந் தேதிக்குள் சாலைகளை சீரமைக்காவிட்டால் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம், எச்.வசந்தகுமார் எம்.பி. மற்றும் 3 எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று எச்.வசந்தகுமார் எம்.பி. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மறியல் போராட்டம்

குமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் இருந்து காவல்கிணறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர இணைப்பு சாலைகளை 2017-ம் ஆண்டு மேம்பாடு செய்ய வேண்டும். ஆனால் இன்று வரை இந்த சாலைகள் மேம்பாடு செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருப்பதுடன், வாகன விபத்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்களின் போக்குவரத்து நலன் கருதி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், வில்லுக்குறி, அழகியமண்டபம், களியக்காவிளை ஆகிய 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்ற விவரத்தை உங்கள் பார்வைக்கு தெரியப்படுத்துகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடை

பின்னர் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 16-ந் தேதி மாவட்டத்தில் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்பதை கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். 16-ந் தேதிக்குள் சாலைகளை சீரமைக்கவேண்டும். இல்லையென்றால் கட்டாயம் மறியல் போராட்டம் நடத்துவோம்.

குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைப்பதற்காக 2017-2018, 2018-2019 நிதி ஆண்டுகளில் ரூ.34 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் டெண்டர் போட்டுள்ளோம், டெபாசிட் கட்டவில்லை, மழை என்று அதிகாரிகள் காரணம் கூறுகிறார்கள். அதுவரை மக்கள் காத்துக் கொண்டு இருப்பார்களா? சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசின் தலையீடு நிச்சயமாக உள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிராக இருப்பதால் ஒரு வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார்கள். மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு சாலை சீரமைப்புக்கு தடை போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story