புலிகள் காப்பக வனப்பகுதியை விட்டு வெளியேற மாட்டோம், வனத்துறையினரிடம், முதுமலை ஊராட்சி மக்கள் திட்டவட்டம்
புலிகள் காப்பக வனப்பகுதியை விட்டு வெளியேற மாட்டோம் என்று வனத்துறையினரிடம், முதுமலை ஊராட்சி மக்கள் திட்டவட்டமாக கூறினர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சி, புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ளது. இங்கு முதுகுளி, நாகம்பள்ளி, மண்டக்கரா, புலியாளம் உள்பட பல்வேறு குக்கிராமங்கள் இருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், முதுமலை ஊராட்சியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற ‘கோல்டன் ஹேண்ட் ஷேக்‘ என்ற மாற்றிடம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பணத்தை பெற விரும்பாத பயனாளிகளுக்கு சன்னக்கொல்லி பகுதியில் மாற்றிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் மாற்றிடம் திட்டத்தின் மூலம் சன்னக்கொல்லிக்கு இடம் பெயர்ந்த பயனாளிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே மாற்றிடம் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு நிதி அல்லது நிலம் சரிவர வழங்கப்படாமல் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நீலகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 168 குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல் தலைமையில் துணை இயக்குனர் செண்பகபிரியா, வனச்சரகர்கள் சுரேஷ், தயானந்தன், வனவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர் முதுமலையில் ஊராட்சி மக்களிடம் நேற்று காலை 11 மணிக்கு கலந்துரையாடல் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சி மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார், மாற்றிடம் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் முதுமலை ஊராட்சி மக்கள் கூறியதாவது:-
ஏற்கனவே மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வனப்பகுதியை விட்டு வெளியேறிய பயனாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் பலருக்கு ரூ.10 லட்சம் நிதியும் முழுமையாக கிடைக்கவில்லை. சிலர் நிலம் வாங்கி தருவதாக கூறி பயனாளிகளை ஏமாற்றி உள்ளனர். அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்றைக்கு நடக்கும் கலந்துரையாடலில் வனத்துறையினர் மட்டுமே வந்து உள்ளனர். ஆனால் மற்ற துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை. இதனால் பெயரளவுக்கு மட்டுமே கலந்துரையாடல் நடைபெறுகிறது. மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரை முதுமலை வனப்பகுதியை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். இவ்வாறு அவர்கள் திட்டவட்டமாக கூறினர். இதைத்தொடர்ந்து கலந்துரையாடலை முடித்து கொண்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story