கோவையில், போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது - முதல் நாளில் 679 பேர் பங்கேற்பு


கோவையில், போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது - முதல் நாளில் 679 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலீஸ் வேலைக்கு உடல் தகுதிதேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 679 பேர் கலந்துகொண்டனர்.

கோவை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை போலீஸ், சிறைக் காவலர், தீயணைப்பு படைவீரர் பணிக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இந்த தேர்வுகள் 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. மொத்தம் விண்ணப்பித்த 2,073 பேரில் முதல் நாளான நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 800 இளைஞர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இவர்களில் 121 பேர் வரவில்லை. 679 பேர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர். உடல்தகுதி தேர்வில் சான்றிதழ்கள், உயரம், எடை, மார்பு அளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, 1,500 மீட்டர்தூர ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினர். 7 நிமிடங்களுக்குள் இந்த ஓட்டத்தை ஓடி முடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை முதல் வெயில் வாட்டியது. இந்த நிலையில் ஒரு வாலிபர் ஓடும் போது மயங்கி விழுந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நந்தகோபால், பாலாஜி, ராம்பிரசாத் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் உடல் தகுதி தேர்வுகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. செல்போன்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை. 2-ம் நாளான இன்றும் ஆண்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள்(சனிக்கிழமை) பெண்களுக்கான உடல் தகுதி தேர்வும் நடைபெறுகிறது.

உடல் தகுதி தேர்வுக்கான ஏற்பாடுகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தேர்வு நடைபெறுவதையொட்டி நேரு விளையாட்டு மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story