உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை


உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 4:26 PM GMT)

கரூரில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பரிசோதனை நடந்தது.

கரூர், 

கரூர் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பயன்படுத்துவதற்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 1,912 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 980 கட்டுப்பாட்டு கருவிகளும் கரூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கருவிகள் தாந்தோன்றிமலை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள கருவிகள் பெல் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களால் முதல்நிலை பரிசோதனை செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதனை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) செல்வராஜ், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சத்்தியமூர்த்தி (புஞ்சை தோட்டக்குறிச்சி), கிருஷ்ணன் (அரவக்குறிச்சி), மஞ்சுஜெயராணி (கிருஷ்ணராயபுரம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இரண்டு நகராட்சிகளும், 11 பேரூராட்சிகளும், 8 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இதில், இரண்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 96,419 ஆண்களும், 1,04,503 பெண்களும், இதரர் 4 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 61,842 ஆண்களும், 65,960 பெண்களும், இதரர் ஒருவரும் வாக்காளர்களாக உள்ளனர். அதேபோல ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,60,091 ஆண்களும், 2,73,149 பெண்களும் இதரர் 52 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஆகமொத்தம், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 4,18,352 ஆண்களும், 4,43,612 பெண்களும், இதரர் 57 பேரும் என மொத்தம் 8,62,021 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

இதில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரகப்பகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக 3,460 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Next Story