தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 6 Nov 2019 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் ஸ்ரீதேவி நகர், மாருதி நகர், சந்துரு நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஸ்ரீதேவி நகரில் உள்ள எல்லா மனைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வருகின்றனர். இதில் வீடுகளுக்கு இடையில் ஒரே ஒரு காலி மனை இருந்து வருகிறது. இந்த மனையில் தனியார் கம்பெனியிடம் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த மனையில் அமைக்க உள்ள செல்போன் கோபுரம் மிக உயரமானது ஆகும். குடியிருப்பிற்காக அனுமதிக்கப்பட்ட மனையை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது சட்ட விதிமுறைக்கு எதிரானது. எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்தநிலையில் மீண்டும் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர் நல சங்க தலைவர் ராஜி கூறுகையில், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியபோது கலெக்டரிடம் பணிகளை நிறுத்தக்கோரி மனு அளித்துள்ளோம்.

ஆனால் தற்போது செல்போன் கோபுரம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு பல வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Next Story