திண்டுக்கல்லில், போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வில் 837 பேர் பங்கேற்பு
திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வில் 837 பேர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் நிலை போலீஸ்காரர், சிறைத்துறை போலீஸ்காரர் மற்றும் தீயணைப்பு படைவீரர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று மாநிலம் முழுவதும் உடல் தகுதி தேர்வு தொடங்கியது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களை பொறுத்தவரை மொத்தம் 2 ஆயிரத்து 597 பேர், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 950 பேர், உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 837 பேர் மட்டுமே உடல்தகுதி தேர்வில் பங்கேற்றனர். 113 பேர் தேர்வுக்கு வரவில்லை.
மேலும் காலை 5 மணிக்குள் மைதானத்துக்கு வந்து விட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் அதிகாலையிலேயே இளைஞர்கள் மைதானத்துக்கு வந்து விட்டனர். இதையடுத்து காலை 6 மணிக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலின் நேரடி மேற்பார்வையில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் மார்பளவு மற்றும் உயரம் அளத்தல் மற்றும் ஓட்டம் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த உடல் தகுதி தேர்வு முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி தேர்வுக்காக இளைஞர்களின் வருகை முதல் உயரம், மார்பளவு அளத்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. இதற்காக தனியாக போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறது.
Related Tags :
Next Story