பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது; சித்தராமையா சொல்கிறார்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்து மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்து பா.ஜனதா அரசு அமைத்து உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் உத்தரவுபடி தான் ஆபரேஷன் தாமரை நடந்தது என்று உப்பள்ளியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகியுள்ளது. இது பா.ஜனதா கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.
பா.ஜனதா பின் வாசல்வழியாக கர்நாடகத்தில் ஆட்சியை அமைத்துள்ளது. எடியூரப்பா, ஈசுவரப்பாவிடம் இல்லாத பணமா?. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீடுகளில் இருக்க போகிறது?. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அவர்களது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதன் பிறகு சிறைக்கு அனுப்புகிறார்கள். இது ஆணவ போக்கு. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த மாநாட்டில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ், எஸ்.ஆர்.பட்டீல், கிம்மனே ரத்னாகர், பத்ராவதி எம்.எல்.ஏ. சங்கமேஸ்வர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story