சேறும், சகதியுமாக காட்சி தரும் போக்குவரத்துக்கழக பணிமனை - சிமெண்டு தளம் அமைக்க கோரிக்கை


சேறும், சகதியுமாக காட்சி தரும் போக்குவரத்துக்கழக பணிமனை - சிமெண்டு தளம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2019 3:45 AM IST (Updated: 6 Nov 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பஸ்கள் நிறுத்தும் பகுதி மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் சிமெண்டு தளம்அமைக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏராளமான விரைவு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த விரைவு பஸ்கள் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காரைக்குடி பகுதியில் இருந்து பல்வேறு பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இங்குள்ள பணிமனையின் அருகே உள்ள இடத்தில் அந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அந்த இடம் செம்மண் பூமியாக உள்ளதால் சிறு மழை பெய்தால் கூட அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாலை நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இது தவிர சில நேரங்களில் அந்த பஸ்கள் சகதியில் சிக்கி தவிக்கும் நிலையும் இருந்து வருகிறது.

தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் திருப்பதி ஆகிய பகுதிக்கு புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ்களும் இந்த இடத்தில் தான் பகல் நேரங்களில் நிறுத்தப்படுகிறது. இதனால் புதிய பஸ்கள் கூட விரைவில் பழுதாகிவிடுகிறது. இது குறித்து அரசு விரைவு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:-

வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை இயக்கி வரும் நாங்கள் இரவு முழுவதும் அந்த பகுதிக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் இந்த பகுதியில் பஸ்களை நிறுத்தி விட்டு பகல் நேரங்களில் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பின்னர் பகல் நேரத்தில் மழை பெய்தால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகி விடுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து பஸ்களை வெளியே கொண்டு வருவதில் கடுமையான சிரமங்களை நாங்கள் சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி முழுவதும் சிமெண்டு தளம் அல்லது பேவர்பிளாக் கற்கள் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் தான் இந்த பகுதியில் நிறுத்தும் பஸ்கள் பழுதாகாமல் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story