சதயவிழாவையொட்டி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு கலெக்டர்-நீதிபதி பங்கேற்பு


சதயவிழாவையொட்டி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு கலெக்டர்-நீதிபதி பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:30 PM GMT (Updated: 6 Nov 2019 7:11 PM GMT)

சதயவிழாவையொட்டி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை, நீதிபதி சிவஞானம் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது ஆண்டு சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று பெரியகோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக கோவில் வளாகத்தில் இருந்து கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. மேள, தாளம் முழங்க புறப்பட்ட இந்த ஊர்வலம் ராஜராஜ சோழன் சிலையை வந்தடைந்தது.

பின்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு கலெக்டர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, சதயவிழாக்குழு உறுப்பினர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

52 அமைப்பினர்

ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய போலீசாரிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள், சாதிய அமைப்புகள், இந்து அமைப்புகள் என 52 அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி போலீஸ்துறை அனுமதி வழங்கியது.

அதன்படி 52 அமைப்பினரும் ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலை அணிவிக்கும்போது எந்த ஒரு அமைப்பினரும் தங்களது கொடி, சின்னங்களை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. சதயவிழாவின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பெரியகோவில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story