மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது + "||" + Srirankam Renganathar Temple arrested for slander

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியவர் கைது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை சிறைக்கு அனுப்ப மறுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதால் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பட்டர்தோப்பை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன் (வயது 49). இவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் உள்ளிட்ட சிலைகள் போலியானவை. அவை மாற்றப்பட்டு உள்ளன.


மேலும் கோவிலில் பல முறைகேடுகளும் நடந்து வருகின்றன என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி ரங்கராஜன் நரசிம்மன் வேண்டும் என்றே கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் வாட்ஸ்- அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பதிவிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரங்கராஜன் நரசிம்மன் மீது இந்திய குற்றவியல் சட்டம் 500 (அவதூறு பரப்புதல்), 505(2) (அவதூறு பரப்பி கலகம் ஏற்படுத்துதல்) மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 45 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் போலீசார் ரங்கராஜன் நரசிம்மன் வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்றது.

மாலை 3 மணி அளவில் போலீசார் ரங்கராஜன் நரசிம்மனை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் -3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம் முன் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அரசு தரப்பு வக்கீல் ரவி, குற்றம் சாட்டப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மூலவர் உள்ளிட்ட சிலைகள் போலியானவை என்றும், பூஜை முறைகள் ஆகம விதிமுறைப்படி நடைபெறவில்லை என்றும் தவறான தகவல்களை முகநூலில் தொடர்ந்து பதிவிட்டு உள்ளார்.

அவரது இந்த செயல்கள் மதநம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது. எனவே அவரை நீதித்துறை காவலுக்கு (ரிமாண்ட்) அனுப்ப வேண்டும். அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்றால் தொடர்ந்து இதே தவறுகளை செய்வார். சாட்சிகளை கலைப்பார் என்று வாதாடினார்.

ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சீனிவாசன், விஜயராகவன் ஆகியோர் ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆகம விதிகளுக்கு மாறாக பல செயல்கள் நடப்பதாகவும், உற்சவர் நம்பெருமாள் உள்ளிட்ட சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதாகவும் ரங்கராஜன் நரசிம்மன் 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு குழுவை நியமித்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு 7 மாதங்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அது தொடர்பான வழக்கு இன்னும் 2 நாட்களில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. அந்த வழக்கில் அவரை ஆஜராக விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவில் நிர்வாகத்துக்கும், அவருக்கும் எந்தவித முன்விரோதமும் கிடையாது. அவரை சிறைக்கு அனுப்பினால் ஐகோர்ட்டில் உள்ள வழக்கில் தலையிடுவதாக ஆகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதாடினார்கள். மேலும் ஐகோர்ட்டில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு சோமசுந்தரம், போலீசார் தொடர்ந்த வழக்கை நிராகரித்தார். அதே நேரம் போலீசார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ரங்கராஜன் நரசிம்மன் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் அது முடியும் வரை ரங்கராஜன் நரசிம்மன் சமூக வலைத்தளங்களில் ஸ்ரீரங்கம் கோவில் தொடர்பாக பதிவுகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். மாஜிஸ்திரேட்டு உத்தரவை தொடர்ந்து ரங்கராஜன் நரசிம்மனை போலீசார் விடுவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மூலனூர் அருகே சம்பவம்: புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
புதுப்பெண்ணை கொன்று உடலை அமராவதி ஆற்றின் கரையோரம் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவர் கொலை: தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சாவு மேலும் 2 பேர் கைது
கார் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆத்தூரில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது
ஆத்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன் றவரை போலீசார் கைது செய்தனர்.
4. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது டீக்கடை தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
அருப்புக்கோட்டையில் மதுரை பேரையூரை சேர்ந்த டீக்கடை தொழிலாளியை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
5. மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக - பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-