கயத்தாறு அருகே பரிதாபம்: லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி


கயத்தாறு அருகே பரிதாபம்: லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 7 Nov 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலியானார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சத்திரபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 68) விவசாயி. இவர் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் எலுமிச்சை பழங்களை பறித்து கொண்டு, அதனை கயத்தாறில் உள்ள கடைகளில் விற்பதற்காக சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கயத்தாறு-கடம்பூர் ரோடு சத்திரபட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக சைக்கிளின் மீது மோதியது.

இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கவேலின் மீது லாரியின் சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

லாரி மோதி இறந்த தங்கவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, கயத்தாறில் இருந்து ஜல்லி கற்கள் லோடு ஏற்றிய லாரி, கடம்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இறந்த தங்கவேலுக்கு சந்திரன், ராஜேந்திரன், கருணாநிதி ஆகிய 3 மகன்களும், கற்புக்கரசி, தங்கரத்தினம், ஜீவரத்தினம் ஆகிய 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சந்திரன், மதுரை ஐகோர்ட்டு வக்கீலாகவும், ராஜேந்திரன் மோட்டார் வாகன ஆய்வாளராகவும், கருணாநிதி அரசு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story