ஈரோட்டில் தொழிலாளி மர்மச்சாவு - கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்


ஈரோட்டில் தொழிலாளி மர்மச்சாவு - கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 8:29 PM GMT)

ஈரோட்டில், கழுத்து அறுபட்ட நிலையில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஈரோடு, 

கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்த தங்கம் (வயது 50) என்பவர், ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு மாரப்பா 3-வது வீதியில் ஸ்டீல் பீரோ மற்றும் பர்னிச்சர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

மேலும் தங்கத்தின் உறவினர்கள் 6 பேர் நிறுவனத்திலேயே தங்கி இருந்து வேலை செய்கிறார்கள். இதில் பூபேஷ் (52) என்ற தொழிலாளியும் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கழுத்து அறுபட்ட நிலையில் பூபேஷ் தனது அறையில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அருகில் கண்ணாடி துண்டும் கிடந்தது.

இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் இதுபற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பூபேஷ் கண்ணாடி துண்டால் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கண்ணாடி துண்டால் கழுத்தை அறுத்து கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவுசெய்தனர். இறந்த பூபேசுக்கு பிரபஜா (48) என்ற மனைவியும், மனோஜ்குமார் (19) என்ற மகனும் உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story