அயோத்தி பிரச்சினையில் கோர்ட்டு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தேசிய செயலாளர் பேட்டி


அயோத்தி பிரச்சினையில் கோர்ட்டு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தேசிய செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 7 Nov 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி பிரச்சினையில் கோர்ட்டு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று ஈரோட்டில் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தேசிய செயலாளர் கூறினார்.

ஈரோடு,

நேஷனல் உமன்ஸ் ப்ரண்ட் அமைப்பின் சார்பில் ஈரோட்டில் ‘இஸ்லாமிய வாழ்வு நமது பெருமை‘ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.ஷகிலா பானு தலைமை தாங்கினார். முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தேசிய செயலாளர் கே.ஐ.சர்மிளா பானு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தற்போது முஸ்லிம் பெண்கள் மற்றும் தலித் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதை நாங்கள் விழிப்புணர்வு மூலம் தெளிவுபடுத்தி வருகிறோம். முத்தலாக் பிரச்சினை தொடர்பாக சென்னையில், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது எங்கேயாவது சிலர் செய்யும் தவறு பெரிதுபடுத்தப்படுகிறது. முத்தலாக் சொல்ல வழிமுறைகள், கால அவகாசங்கள் உள்ளன. அதுபற்றியும் மக்களிடம் எடுத்து கூறுகிறோம். முஸ்லிம்களின் சட்ட, திட்டங்கள் தெரியாமல், சிலர் தவறாக செயல்படுகின்றனர்.

முஸ்லிம்களின் ஆடை, கல்வி, நடந்து கொள்ளும் விதங்களை அறிந்தவர்கள் சரியாக செயல்படுகின்றனர். அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிறைவு நிலையில் உள்ளது. கோர்ட்டு மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வழக்கின் தீர்ப்புக்குப்பின், எங்களுக்கான தேசிய அளவிலான கமிட்டி, அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜரினா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் அசினா பானு வரவேற்று பேசினார். முடிவில் செயற்குழு உறுப்பினர் ரசிதா நன்றி கூறினார்.

Next Story