ஏலகிரிமலையில் ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்


ஏலகிரிமலையில் ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 7 Nov 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் ரூ.50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்தனர். அங்கு 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 45), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் கொட்டையூர் நோக்கி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அருளின் தலைமீது துணியை போர்த்தி காருக்குள் இழுத்து மூடிக்கொண்டு கடத்தி சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அருளின் மகன் ராபின் என்பவருக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் தந்தையை விடுவிப்பதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்தனர். உடனடியாக அருள் குடும்பத்தினர் ரூ.10 லட்சத்தை தயார் செய்துகொண்டு இருந்தனர்.

அப்போது மீண்டும் தொலைபேசியில் மர்ம நபர்கள் ராபினை தொடர்பு கொண்டு அருளை விடுவிக்க ரூ.50 லட்சம் கொடுத்தால் மட்டுமே உயிருடன் விடுவிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அருளின் மனைவி சாந்தி ஏலகிரிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி உடனடியாக திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து தங்கவேலு தலைமையில், 3 தனிப்படை அமைத்து அருளை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட செல்போனின் டவர் இருந்த இடமான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் ஒரு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். அங்கு பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story